ரஃபேல் விமானம் குறித்து 4 முறை பதிலளித்துவிட்டேன்: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

 

ரஃபேல் விமானம் குறித்து 4 முறை பதிலளித்துவிட்டேன்: பாதுகாப்புத்துறை  அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

ரஃபேல் விமானம் குறித்து கேள்விகளுக்கு நாடளுமன்றத்தில் 4 முறை பதிலளித்துவிட்டேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

சென்னை: ரஃபேல் விமானம் குறித்து கேள்விகளுக்கு நாடளுமன்றத்தில் 4 முறை பதிலளித்துவிட்டேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.1,600 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் அரசின் கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்காமல் மவுனத்தையே சாதித்து வருகிறார்.

இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே சமீபத்தில் இதுகுறித்து பேசுகையில், இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களின் ஆஃப்செட் பகுதிகளை தயாரிப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புகளை தரவில்லை. மாறாக டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய நெருக்கடியை இந்திய அரசு உருவாக்கிக் கொடுத்தது கூறியது பெரும் விவாதமாகியது.

இந்நிலையில், ரஃபேல் விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஃபேல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் 4 முறை பதிலளித்துவிட்டேன்.  2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் டசால்ட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சிதான் பதிலளிக்க வேண்டும். யாருடன் ஒப்பந்தம் செய்வது என்ற விவரத்தை வெளியிடும் முறையை மாற்றியது காங்கிரஸ் கட்சிதான் என்றார்.