ரஃபேல் ஒப்பந்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

ரஃபேல் ஒப்பந்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

டெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனை திட்டவட்டமாக மறுத்து வருவதுடன், இந்த ஒப்பந்தம் தொடர்பான விலை மற்றும் கூடுதல் தகவல்களை வெளியிடமாட்டோம் என்ற நிலைப்பாட்டையும் அக்கட்சி எடுத்துள்ளது.

ஆனால், ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஃபேல் விமான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்தது கூடுதல் சர்ச்சையானது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள், காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் பாஜக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட தகவல்களையும் தெரிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.