ரஃபேல் ஒப்பந்தத்தை பெற வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம்: பிரான்ஸ் பத்திரிக்கை

 

ரஃபேல் ஒப்பந்தத்தை பெற வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம்: பிரான்ஸ் பத்திரிக்கை

ரஃபேல் ஒப்பந்தத்தை பெற வேண்டுமானால் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் என டசால்ட் நிறுவன ஆவணங்களில் தகவல் உள்ளதாக பிரான்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது

பாரீஸ்: ரஃபேல் ஒப்பந்தத்தை பெற வேண்டுமானால் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் என டசால்ட் நிறுவன ஆவணங்களில் தகவல் உள்ளதாக பிரான்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது.

ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனை திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இதனிடையே, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஃபேல் விமான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்தது கூடுதல் சர்ச்சையானது.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தை பெற வேண்டுமானால் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் என டசால்ட் நிறுவன ஆவணங்களில் தகவல் இடம்பெற்றுள்ளதாக பிரான்ஸ் பத்திரிகையான மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.