யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை எதிரொலி! பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.6.27 லட்சம் வழங்கிய உ.பி. மக்கள்…..

 

யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை எதிரொலி! பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.6.27 லட்சம் வழங்கிய உ.பி. மக்கள்…..

உத்தரப் பிரதேசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்ததுடன், தாங்களாகவே முன்வந்து இழப்பீடாக ரூ.6.27 லட்சம் வழங்கியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. சில பகுதிகளில் போராட்டங்கள் கலவரமாக வெடித்தது. கார்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். 

வன்முறை

இதனையடுத்து, எதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் வன்முறையில் ஈடுபட முடியாது. இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, ஏலம் விட்டு இழப்புகள் ஈடு செய்யப்படும் என கடந்த வாரம் அம்மாநில  முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை செய்தார்.

யோகி ஆதித்யநாத்

மேலும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டுபிடித்து இழப்பீடு பெறுவதற்காக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. புலண்ட்ஷாஹ்ர் பகுதிவாசிகள் பொதுசொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து தாங்களாகவே முன்வந்து இழப்பீடாக ரூ.6.27 லட்சத்துக்கான  டிமாண்ட் டிராப்டை அம்மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த காவல் துறை சூப்பிரண்டு ஆகியோரிடம் கொடுத்தனர். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என உறுதிமொழி கடிதமும் கொடுத்தனர். உத்தர பிரதேச மக்களின் இந்த நடவடிக்கை நல்லதொரு மாற்றத்துக்கான அறிகுறியாகவே தென்படுகிறது.