யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை போலி; பிரியங்கா காந்தி சாடல்!

 

யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை போலி; பிரியங்கா காந்தி சாடல்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநில அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை போலியானது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்

லக்னோ: கடந்த இரண்டு ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநில அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை போலியானது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ஏப்ரல் 11, 18, 23,  மற்றும் மே மாதம் 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலையொட்டி, இதுவரையில், தன்னுடைய சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாயார் சோனியா காந்திக்காகவும் மட்டுமே தேர்தல் சமயங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பிரியங்கா காந்தியை, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அக்கட்சியின் தலைமை நியமித்தது.

priyanka

இந்நிலையில், கங்கை நதியில், கங்கா யாத்திரா என்ற பிரசார பயணத்தை தொடங்கி உள்ளாா் பிரியங்கா காந்தி. முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் முன், பிரயாக்ராஜின் சாத்நங் பகுதியில் இருந்து வாரணாசியின் அஸ்சி கட் பகுதி வரை மூன்று நாள் கங்கா யாத்திரையை துவங்குவதற்காக திரிவேணி சங்கமத்தில் பிரியங்கா பூஜை செய்தார்.

கங்கை நதிவழியாக படகில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்ட பிரியங்கா, மோடி அரசின் முன் எந்த ஒரு விஷயத்தையும், பிரச்னையையும் எழுப்பினால், நாம் நசுக்கப்படுகிறோம், லத்தியால் தாக்கப்படுகிறோம். அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், பேசுவர்கள் மீது தேசவிரோத சட்டம் பாய்கிறது என்றார்.

yogi

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை போலியானது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

இந்த அறிக்கைகள் கள யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை என சுட்டிக் காட்டிய பிரியங்கா, விவசாயிகள், ஏழைகள், பள்ளி ஆசிரியர்கள் பெண்கள் என உத்தரப்பிரதேச மாநில மக்களை நாள்தோறும் நான் சந்தித்து வருகிறேன். அவர்கள் அனைவருமே அரசாங்கத்தின் மீதி அதிருப்தியில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் பாஜக, கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக-வின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.