யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் ஆனது வங்காளதேசம்

 

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் ஆனது வங்காளதேசம்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காளதேசம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

போட்செஸ்ட்ரூம்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காளதேசம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று இந்திய அணியும், வங்காளதேசமும் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 88 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களும், துருவ் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். வங்காளதேச அணி தரப்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகளும், ஷோரிபுல் இஸ்லாம் மற்றும் தன்சிம் தலா 2 விக்கெட்டுகளும், ரகிபுல் ஹசன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 178 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேச அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை சாம்பியன் பட்டதை முதன்முறையாக வென்றது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக பர்வேஸ் 47 ரன்களும், அக்பர் அலி 43 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும், சுஷாந்த் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். வங்காளதேச அணி கேப்டன் பர்வேஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.