யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்: கமலின் அறிவிப்பு, கலாய்க்கும் அரசியல் கட்சிகள்!

 

யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்: கமலின் அறிவிப்பு, கலாய்க்கும் அரசியல் கட்சிகள்!

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை  முன்னிட்டு தமிழக அரசியல் களம்  சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. திமுக, அதிமுக தலைமைகளின்  கீழ் கூட்டணிகள் அமைந்துள்ளன. இதையடுத்து கமலின் மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிடவை கூட்டணி குறித்துப் பேசி வருகின்றன. அதே சமயம் திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய பெரியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி உறுப்பினர்களை விருப்ப மனுப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளன. 

இந்நிலையில்  மக்கள் நீதி மய்யம் சார்பிலும் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றக் கட்சிகளைப் போலல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கூட விருப்ப மனுப் பெற்றுத் தாக்கல் செய்யலாம். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு கமலின்  ஆதரவாளர்களால் பாராட்டப்பட்டாலும் தமிழக அரசியலில் கமலின் மீதான விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது. விருப்ப மனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கமல், ‘விருப்ப மனு வாங்குவதில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம் என்றில்லை. மக்களும் பங்குகொள்ள வேண்டும். தங்கள் வட்டாரத்தில் அல்லது மாவட்டத்தில் எம்.பி.யாக வர சிறப்பான தகுதியுடையவர் என்று எவரைக் கருதுகிறார்களோ அவரை பரிந்துரைக்கலாம்’ என்றார்.

முன்னதாக ரஜினியுடன் அரசியல் காலத்தில் பணியாற்றும்  வாய்ப்பு உள்ளது. ஆனால் அது பற்றி உறுதியாகக் கூற முடியாது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.