‘யாருடைய மகன் என்றாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை’ :மூத்த பாஜக தலைவரின் மகனை எச்சரித்த மோடி!

 

‘யாருடைய மகன் என்றாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை’ :மூத்த பாஜக தலைவரின் மகனை எச்சரித்த மோடி!

அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பாஜக தலைவரின் மகனது செயல் ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.

புதுடெல்லி:  அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பாஜக தலைவரின் மகனது செயல் ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்த கட்டுமானத்தைக் கடந்த 26ஆம் தேதி போலீசார் துணையுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதை கேள்விப்பட்டு அங்கு வந்த பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான  கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் பாஜக எம்.எல்.ஏவுமான ஆகாஷ், அரசு அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, ஆகாஷ் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில்  வெளியே வந்தார். 

 

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் கூட்டம் இன்று  நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர்,  மத்திய பிரதேசத்தில் அரசு அதிகாரியை தாக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்த கட்டுமானத்தை அகற்றிய அரசு அதிகாரியை பணிசெய்யவிடாமல் ஆகாஷ் தடுத்தது ஏற்புடையதல்ல. அவர் யாருடைய மகன் என்றாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. கட்சியின் பெயரில் அராஜகம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. அதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார். 

modi

தொடர்ந்து பேசிய அவர், ஆகாஷ் விஜய்வர்கியா சிறையிலிருந்து வெளிவந்த போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஆரவாரம் செய்த அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட  வேண்டும்’ என்றும் ஆவேசமாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து கூறியுள்ள  பாஜக எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி, பிரதமர் ஒரு தெளிவான தகவலை அனைவருக்கும் புரியவைத்துள்ளார். இதுபோன்ற செயல் யார் செய்தாலும்  அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார். 

ஆகாஷின் தந்தையான கைலாஷ் விஜய்வர்கியா பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் ஆவார். இரண்டு முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை இந்தூரின் மேயராகவும் கைலாஷ் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.