யானையின் வழித்தடமும் உறவுகளும்! தன்னம்பிக்கைக் கதைகள்

 

யானையின் வழித்தடமும் உறவுகளும்! தன்னம்பிக்கைக் கதைகள்

மூன்று தம்பிகள், இரண்டு அக்காக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என்று ஐந்து குடும்பங்கள் சேர்ந்து சுற்றுலா சென்றார்கள். காலை ஐந்து மணிக்கு அவர்கள் சுற்றுலா கிளம்பும் முன் குடும்பத்தில் மூத்த அக்காள், கல்லூரியில் படிக்கும் தனது தம்பி மகனை அழைத்தார். 

மூன்று தம்பிகள், இரண்டு அக்காக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என்று ஐந்து குடும்பங்கள் சேர்ந்து சுற்றுலா சென்றார்கள். காலை ஐந்து மணிக்கு அவர்கள் சுற்றுலா கிளம்பும் முன் குடும்பத்தில் மூத்த அக்காள், கல்லூரியில் படிக்கும் தனது தம்பி மகனை அழைத்தார். 
‘‘தம்பி, இந்த காலி தண்ணீர் பாட்டில்களிலும் தண்ணி பிடிச்சு வைப்பா. பயணத்துல தாகத்துக்கு வசதியாய் இருக்கும்’’ என்றார். அத்தை சொன்னபடி அவனும் பொறுமையாகத் தண்ணீர் பிடித்து வைத்தான். அனைவரும் பஸ்ஸில் ஆடிப் பாடியபடி சுற்றுலா சென்றார்கள். அங்கே மதிய உணவை ஓர் உணவகத்தில் உண்டார்கள்.

brother and sister

அப்போது அதே கல்லூரி மாணவனை அழைத்து, ‘‘தம்பி, இந்த கவர்ல பருப்பு வடை இருக்கு. எல்லோரது இலையிலும் வை. இங்கு சாப்பிடலாமா என்று நான் ஹோட்டல்காரர்களிடம் கேட்டு விட்டேன்’’ என்றார். அத்தை சொன்னபடி அந்தக் கல்லூரி மாணவன் அனைவருக்கும் வடையை வைத்து விட்டு வந்தான். மாலை வீடு திரும்பும் போது சில பைகளை பஸ்ஸில் வைக்க வேண்டி இருந்தது. அத்தை அதே தம்பி மகனை அழைத்து, ‘‘தம்பி! இந்த லக்கேஜை எல்லாம் பஸ்ல வச்சிருப்பா’’ என்றார். திரும்பும் போது அனைவரும் பஸ்ஸில் ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்கள். வேலைகளை செய்த தம்பி மகன் மட்டும் பின் சீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தான். வேலைகளைச் சொன்ன அத்தைக்கு, ‘ஏன் அவன் அமைதியாக இருக்கிறான்’ என்று புரியவே இல்லை. பின்னால் எழுந்து அவனருகே அமர்ந்து காரணம் கேட்டார். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவன் வாயைத் திறந்தான். ‘‘காலையில என்னைத் தான் தண்ணி பிடிக்கச் சொன்னீங்க. அப்புறம் எல்லோருக்கும் வடை பரிமாறவும் என்னைத் தான் கூப்பிட்டீங்க. லக்கேஜையும் என்னைத் தான் எடுத்து வைக்கச் சொன்னீங்க. ஏன் அத்தை? நான் மட்டும் தான் இங்க இருக்கேனா? எத்தனை பேர் என் வயதில் இருக்காங்க. அவுங்க கிட்ட ஒரு வேலை கூட சொல்லலையே’’ என்று கேட்டு விட்டு கண்கலங்க ஆரம்பித்தான். 
‘தன் நோக்கம் அதுவல்ல’ என்று அத்தை அவனை சமாதானப்படுத்தி ஆடிப் பாட அழைத்து வந்தார். இந்த சம்பவத்தில் அந்த அத்தையின் நோக்கம், குறிப்பிட்ட தம்பி மகனை மட்டும் வேலை வாங்குவது இல்லை என்றாலும் அவரை அறியாமல் அதைச் செய்து விட்டார். இப்படித் தான் நாம், யாருடைய மனதைப் புண்படுத்துகிறோம் என்று தெரியாமலேயே தினம் தினம் பலரது மனதைத் துன்புறுத்துகிறோம். நாம் செய்கிற செயல் அடுத்தவரின் மனதைக் காயப்படுத்துவதை நாம் அறிவதும் இல்லை. அதே சமயம், நம்மால் நம்மையறியாமல் காயப்பட்டவர்கள் அத்தனை எளிதில் அதை மறந்து விடுவதுமில்லை. நம் வாழ்க்கையில் மிக சிறியதாக ஒரு செயலைச் செய்தாலும், அது யார் மனதையாவது கடுமையாக பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்திலோ, பொது வாழ்க்கையிலோ, ‘அனைவரையும் சமமாக நடத்துகிறோமா’ என்பதைத் திரும்பத் திரும்ப கவனித்துக் கொண்டே இருந்தால், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நம்மை இன்னும் அதிகமாக மதித்து நேசிப்பார்கள். யானை, காட்டில் உலாவும் போது, அதன் வழித்தடத்தில் தென்படுகிற பொருட்களை எல்லாம் மிதித்து, துவைத்து நாசம் செய்து விட்டு தான் ஒரு கரும்பையோ, தென்னங்கீற்றையோ உண்கிறது. அது சாப்பிடுகிற சில கரும்புகளுக்காக ஒரு தோட்டத்தையே மிதித்து நாசம் செய்வது போல நமது செயல்கள் இருக்கக் கூடாது!