யானைப் பசிக்கு சோளப்பொறி… ரூ.15 ஆயிரம் கோடியை கொரோனா தடுப்புக்கு ஒதுக்கிய பிரதமர் மோடி!

 

யானைப் பசிக்கு சோளப்பொறி… ரூ.15 ஆயிரம் கோடியை கொரோனா தடுப்புக்கு ஒதுக்கிய பிரதமர் மோடி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா கடந்த ஜனவரி மாதம் பரவத் தொடங்கியது. கொரோனா நோயாளிகளை கையாள பிரத்தியேக மருத்துவமனை அமைக்கப்பட்டு அங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா உலகம் முழுக்க பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை புறக்கணித்த நாடுகள் தற்போது அவதியுறுகின்றன. அதில் இந்தியாவும் ஒன்றாக மாறிப்போனது வேதனை.

கொரோனாவை எதிர்கொள்ள நமக்கு போதுமான காலம் இருந்தும், நம் ஊரில் அது பரவாது என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்துவிட்டோம். வேகமாக பரவி வருகிறது இனியாவது ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று வலியுறுத்திய நேரத்தில் 14 மணி நேர மக்கள் ஊரடங்குதான் அறிவிக்கப்பட்டது. அதற்குள்ளாகவே கொரோனா பரவுதல் வேகம் எடுக்க, ஒவ்வொரு மாநிலமும் அதன் எல்லையை மூடி ஊரடங்கை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. எல்லோரும் அறிவிக்கட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது போல இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இப்போதாவது அறிவித்தாரே என்று அவருக்கு பாராட்டுக்கள் குவியும் வேளையில், கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார ரீதியான திட்டங்கள் பற்றி எதுவும் கூறாதது அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அதிர்ச்சியை அதிகரிக்கச் செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு கொரோனாவை எதிர்கொள்ள தகுந்த பாதுகாப்பு ஆடை, முகக்கவசம் கூட இல்லை என்று பிரச்னை கிளப்பிய நேரத்தில், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மாநில அரசுகள் தேடி வரும் நிலையில் ரூ.15 ஆயிரம் கோடி அறிவிப்பு போதுமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது. கேரள அரசு தன் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, மக்களுக்கு பொருளாதார, உணவு பாதுகாப்பு வழங்க ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. ஒரு சிறிய மாநிலமே ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்கிய நிலையில், மத்திய அரசு ரூ.15 ஆயிரம் மட்டுமே ஒதுக்குவது சரியா என்று கேள்வி எழுந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் பான் கார்டு – ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் அளிக்கப்படும் என்கிறார், பிரதமர் வீட்டில் இருப்பது அவசியம் என்று மட்டும் கூறிச் செல்கிறார். இவை எல்லாம் பிரச்னையின் தீவிரம் உணர்ந்துதான் பேசுகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பொருளாதார பாதிப்பை விட உயிர் முக்கியம் என்ற மோடி உயிரைக் காக்க இன்னும் அதிகம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.