“யாசகம் பெறுவோரை விட கேவலமாக போய் விட்டோமா ” : ஆவின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

 

“யாசகம் பெறுவோரை விட கேவலமாக போய் விட்டோமா ” : ஆவின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

ஆவின் பால் விற்பனை செய்வதையும், விநியோகம் செய்வதையும் புறக்கணிக்கும் நிலைக்கு பால் முகவர்களை தள்ளியுள்ளது.

ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக மாற்றி அமைப்பதோடு, பால் முகவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆவின் பாலின் விலையை தமிழக அரசு உயர்த்தியது. இதையடுத்து பால் முகவர்களுக்கான விற்பனை கமிஷன் உயர்த்த கோரிக்கை வாய்த்த நிலையில் ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு  50பைசா  உயர்த்தியது. மேலும் ஆவின் பால் விநியோகத்தை மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கு என ஆவின் நிர்வாகம் அறிவித்தது.

ponnusamy

இடர்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பால் முகவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவை பின்வருமாறு: 

‘கடந்த மாதம் ஆவின் பால் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்திய நிலையிலும் பால் முகவர்களுக்கான விற்பனை கமிஷன் தொகை சுமார் 18ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாததால் உடனடியாக ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்கிற எங்களது சங்கத்தின் கோரிக்கையை ஆணித்தரமாக ஆவின் நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் வழக்கம் போல் முன் வைத்தோம்.

எங்களது சங்கத்தின் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிமடுத்த ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு வெறும் 50பைசா மட்டும் கமிஷன் தொகையை உயர்த்தி அறிவித்து விட்டு, ஆவின் பால் விநியோகம் செய்யும் முறையில் பால் முகவர்களை முற்றிலுமாக மறைத்து இருட்டடிப்பு செய்து விட்டு அதனை மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கு என அறிவித்ததோடு, உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையையும் மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் புறவாசல் வழியே லஞ்சமாக அபகரிக்க திட்டமிட்டது.

பொதுமக்களுக்கு ஆவின் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்யும் பால் முகவர்களை புறந்தள்ளி இருட்டடிப்பு செய்ததை கண்டித்தும், உயர்த்தப்பட்ட அந்த 50பைசா கமிஷன் தொகையை முழுமையாக பால் முகவர்களுக்கு வழங்கிட வேண்டும் என போர்க்குரல் கொடுத்ததோடு, ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை சுட்டிக் காட்டி அதனை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்தோம்.

ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள், தில்லுமுல்லுகளை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் தற்போது ஆவின் பால் விற்பனைக்கான மொத்த கமிஷன் தொகை லிட்டருக்கு 2.00யில் மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் பால் முகவர்கள் லிட்டருக்கு தலா 25பைசா எடுத்துக் கொண்டு மீதமுள்ள 1.50ஐ சில்லறை வணிகர்களுக்கு வழங்கிட வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆவின் நிர்வாகம்.

 

aavin

ஆவின் மொத்த விநியோகஸ்தர்களுக்கு ஆவின் பாலினை விநியோகம் செய்திட வாகன வாடகையாக லிட்டருக்கு 70பைசா வழங்கி விட்டு அதில் 20பைசாவை லஞ்சமாக பறித்துக் கொள்ளும் ஆவின் நிர்வாகம் பால் முகவர்களுக்கு வெறும் 25பைசா மட்டுமே கமிஷன் தொகை என சொல்லி பால் முகவர்களின் தன்மானத்தை சீண்டிப் பார்த்துள்ளது.

இன்றைய சூழலில் யாசகம் பெறுவோர் கூட 1.00ரூபாய்க்கு குறைவாக வழங்கினால் அதனை நம்மிடமே திருப்பி கொடுத்து விடும் சூழ்நிலையில் ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனைக்கு 25பைசா மட்டுமே கமிஷன் தொகை என குறிப்பிட்டு பால் முகவர்களை கேவலப்படுத்தியுள்ளதோடு ஆவின் பால் விற்பனை செய்வதையும், விநியோகம் செய்வதையும் புறக்கணிக்கும் நிலைக்கு பால் முகவர்களை தள்ளியுள்ளது.

எனவே பால் முகவர்களை இருட்டடிப்பு செய்ததோடு எங்களது வாழ்வாதாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. காமராஜ், பால் முகவர்களை யாசகர்களை விட கேவலமாக எண்ணி உத்தரவு பிறப்பித்துள்ள ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் திரு. ரமேஷ் குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக மாற்றி அமைப்பதோடு, பால் முகவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்கிட வேண்டும் தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

எங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால் வரும் சனிக்கிழமை மாலை எங்களது சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.