ம.பி. விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி: புதிய முதல்வரின் முதல் கையெழுத்தில் அதிரடி!

 

ம.பி. விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி: புதிய முதல்வரின் முதல் கையெழுத்தில் அதிரடி!

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள கமல்நாத், அம்மாநில விவசாயிகளின் கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள கமல்நாத், அம்மாநில விவசாயிகளின் கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அதன்படி, மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அம்மாநில தலைநகர் போபாலில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

kamal nath

தற்போது, ம.பி மாநில முதல்வராக பதவியேற்றுள்ள கமல்நாத், 9 முறை எம்.பி.-யாகவும், மத்திய தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 72 வயதாகும் கமல்நாத் முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். 

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அம்மாநில விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் உத்தரவில் தன் முதல் கையெழுத்தை இட்டுள்ளார் கமல் நாத்.