மோட்டார் வாகன திருத்த சட்டத்தால் அலறும் வாகன ஓட்டிகள்! வாகன புகை உமிழ்வு சோதனை மையங்களில் அலை மோதும் கூட்டம்

 

மோட்டார் வாகன திருத்த சட்டத்தால் அலறும் வாகன ஓட்டிகள்! வாகன புகை உமிழ்வு சோதனை மையங்களில் அலை மோதும் கூட்டம்

மோட்டார் வாகன திருத்த சட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் கிலியில் உள்ளனர். கடும் அபராதத்தை தவிர்க்க வாகன புகை கட்டுப்பாடு சான்றிதழ் வாங்குவதற்காக வாகன உமிழ்வு சோதனை மையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.

சாலைகளில் ஒழுக்கத்தை கொண்டு வரும் நோக்கிலும், விபத்துக்களால் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது, இன்ஸ்யூரன்ஸ், வாகன புகை கட்டுபாடு சான்றிதழ் (பி.யூ.சி.), வாகன பதிவு சான்றிதழ் போன்றவை இல்லாமல் சாலையில் வாகனத்தில் சென்றால் அதற்காக விதிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.  

வாகன புகை உமிழ்வு சோதனை மையம்

மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது. இதனையடுத்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடும் அபராதத்தை காவல் துறையினர் விதிக்க தொடங்கினர். கடுமையான அபராத தொகையால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இப்படி தெண்டமாக அபராத தொகையை செலுத்துவதற்கு பதில் ஒழுங்காக உரிய ஆவணங்களுடன் செல்வோம் என வாகன ஓட்டிகள் என முடிவு செய்து விட்டனர்.

அதன் எதிரொலியாகதான் வாகன ஓட்டிகள் வாகன புகை கட்டுப்பாடு சான்றிதழ் பெறுவதற்காக வாகன புகை உமிழ்வு சோதனை மையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர். கடந்த 18 நாட்களில் மட்டும் வாகன புகை கட்டுபாடு சான்றிதழ் பெற்றது கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பீகார் மற்றும் உத்தரகாண்டில் வாகன ஓட்டிகள் பி.யூ.சி. சான்றிதழ் பெற்றது 9 மடங்கு உயர்ந்துள்ளது. அதேசமயம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுன் போது இந்த மாதத்தில் இதுவரை (கடந்த புதன்கிழமை வரை). தமிழ்நாட்டில் பி.யூ.சி. சான்றிதழ் பெறும் நிலவரம் சுமாராகவே உள்ளது.

வாகன புகை உமிழ்வு

பீகாரில் இம்மாதம் 18ம் தேதிவரை 2.87 லட்சம் வாகன புகை கட்டுபாடு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அங்கு 31,708 சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. உத்தரகாண்டில் வாகன புகை கட்டுபாடு சான்றிதழ் பெற்றது 37,961-லிருந்து 84,871ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் வாகன ஓட்டிகள் வாகன புகை கட்டுபாடு சான்றிதழ் பெறுவது அதிகரித்துள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் வாகன புகை கட்டுபாடு சான்றிதழ்களை வாகன ஓட்டிகள் பெற்றது 1.49 லட்சத்திலிருந்து 1.05 லட்சமாக குறைந்துள்ளது.