மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்!

 

மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். தற்போது நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது. 

 

இதையடுத்து  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் வலியுறுத்தியதாக  அறிவிக்கபட்டது. இதை தொடர்ந்து ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம்  போன்ற மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.  இருப்பினும் இதுகுறித்து தமிழக முதல்வர் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் எடுக்கவில்லை. 

 

இந்நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து பிரதமர்  மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என  ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.    

முன்னதாக தமிழகத்தை பொறுத்தவரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு நீடிக்கப்பட்டால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து  அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.