மோடி சிறந்தவர் என்று கூறிய பெண்ணுக்கு ரேஷன் வழங்க மறுத்த ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ….

 

மோடி சிறந்தவர் என்று கூறிய பெண்ணுக்கு ரேஷன் வழங்க மறுத்த ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ….

ராஜஸ்தானில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டை காட்டிலும் மோடி சிறந்தவர் என்று கூறிய பெண்ணுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ரேஷன் பொருட்கள் வழங்க மறுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 ராஜஸ்தான் மாநிலம் சித்ரோர்கார் மாவட்டம் பேகன் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர சிங் பிதுரி. இவரும் சர்ச்சைகளும் இணை பிரியா தோழர்கள். தற்போது,  மோடி சிறந்தவர் என கூறிய பெண்ணிடமிருந்து ரேஷன் பொருட்களை திரும்ப வாங்கியதால் ராஜேந்திர சிங் பிதுரி சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திர சிங் பிதுரி

கடந்த சனிக்கிழமையன்று பேகனின் ராவத்பட்டா பகுதியில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர சிங் பிதுரி கலந்து கொண்டு மக்களுக்கு ரேஷன் விநியோகம் செய்தார். அந்நிகழ்ச்சியில் பிதுரி பேசுகையில், யார் சிறந்தவர் அசோக் கெலாட்டா அல்லது மோடியா? ரேஷன் கொடுக்கும் மனிதரா அல்லது உங்களை விளக்குகள் ஏற்ற சொன்னவரா? என கூட்டத்தினரை பார்த்து கேட்டார். 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

கூட்டத்தில் பலர் கெலாட் என கூறினர். அப்போது ஒரு பெண்மணி மோடி என்று கூறினார். உடனே பிதுரி அந்த பெண்மணியிடம் ரேஷன் பொருட்களை திரும்ப கொடு மற்றும் வீட்டுக்கு போய் விளக்குகளை ஏற்று என தெரிவித்தார். இந்த நிகழ்வின் வீடியோ வெளியாகி மிகவும் வைரலானது. இது தொடர்பாக பிதுரி கூறுகையில், அந்த வீடியோவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உணவு கொடுப்பவரா அல்லது உங்களை விளக்குகள் ஏற்ற சொன்னவரா, யார் சிறந்தவர் என அவர்களிடம் சும்மா கேட்டேன். நான் அந்த பெண்மணிக்கு ரேஷன் வழங்கினேன். அது கெலாட் அரசாங்கத்தால் அனுப்பட்டது என தெரிவித்தார்.