மோடியை பார்த்து பேசும் போது பாதாம் பருப்பு மேட்டரை முடிச்சு விடுங்க- மைக் பாம்பியோவை நெருக்கும் அமெரிக்கர்கள்….

 

மோடியை பார்த்து பேசும் போது பாதாம் பருப்பு மேட்டரை முடிச்சு விடுங்க- மைக் பாம்பியோவை நெருக்கும் அமெரிக்கர்கள்….

இந்தியா இறக்குமதியாகும் பாதாம் பருப்புக்கு கூடுதல் வரி விதித்தால் நம்ம பொழப்புல மண்ணு விழுந்து விடும். அதனால அடுத்த வாரம் மோடியை பார்த்து பேசும் போது கூடுதல் வரியை நீக்க சொல்லுங்க என அமெரிக்க உள்துறை செயலர் மைக் பாம்பியோவிடம் அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இறக்குமதியால் அமெரிக்க உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அதனால், சீனா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார். குறிப்பாக இந்தியாவிலிருந்து அந்நாடு இறக்குமதி செய்யும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் போன்ற பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தினார்.இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூடுதலாக 28 கோடி டாலர் வரை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மைக் பாம்பியோ

இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், வால்நட், ஆப்பிள் உள்ளிட்ட 28 பொருட்கள் மீதான இறக்குமதி வரி மத்திய அரசு உயர்த்தியது. கடந்த 16ம் தேதி இது நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 21 கோடி டாலர் வருவாயாக கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாதாம் பருப்புக்கு கூடுதல் வரி விதித்தது அமெரிக்க விவசாயிகளை ஆட்டம் காண வைத்து விட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிகளவில் பாதாம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்துதான் பாதாம் பருப்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கலிபோர்னியா விவசாயிகள் ஆண்டுதோறும் சுமார் ரூ.4,500 கோடி மதிப்புக்கு பாதாமை இந்தியாவுக்கு விற்பனை செய்கின்றனர். தற்போது இந்தியா பாதாம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பது அவர்களுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

பாதாம் மரம்

இதன் எதிரொலியாக கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் அந்நாட்டு உள்துறை செயலர் மைக் பாம்பியோவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது பாதாம் இறக்குமதி மீதான கூடுதல் வரி விதிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க உள்துறை செயலர் மைக் பாம்பியோ வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.