மோடியின் முதல் 100 நாள் ஆட்சியில் ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

 

மோடியின் முதல் 100 நாள் ஆட்சியில் ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் 100 நாள் ஆட்சியில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழந்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று தனி பெரும்கட்சியாக பா.ஜ. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 2வது முறையாக நரேந்திர மோடி கடந்த மே 30ம் தேதி பிரதமராக  பொறுப்பேற்றார். அன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.43 லட்சம் கோடியாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தை

ஆனால் அதன்பிறகு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.13 லட்சம் கோடிக்கும் மேல் குறைந்து ரூ.141.15 லட்சம் கோடியாக (செப்டம்பர் 9ம் தேதி நிலவரப்படி) சரிந்தது. கடந்த 30ம் தேதி முதல் கடந்த திங்கட்கிழமை வரை மும்பை  பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,687 புள்ளிகள் அல்லது 6.74 சதவீதம் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 943 புள்ளிகள் அல்லது 7.89 சதவீதம் வீழ்ந்தது.

பங்குச் சந்தைகளின் சரிவுக்கு மற்றும்  முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததற்கு, கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடும் சரிவு கண்டு வருவது, நாட்டின் வளர்ச்சி அதாள பாதளத்தில் வீழந்தது, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டியது, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொண்டு முதலீட்டை விலக்கியது போன்றவை முக்கிய காரணமாகும்.

முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்

அதேசமயம் மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வரும் நாட்களில் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காண வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.