மோடியின் கட்டிப்பிடி வைத்தியம் எனக்கு பல பாடங்களை கற்று கொடுத்தது – மனம் திறந்த இஸ்ரோ தலைவர் கே சிவன்

 

மோடியின் கட்டிப்பிடி வைத்தியம் எனக்கு பல பாடங்களை கற்று கொடுத்தது – மனம் திறந்த இஸ்ரோ தலைவர் கே சிவன்

சந்திரயான் 2 தோல்வி அடைந்தபோது, பிரதமர் மோடி என்னை கட்டி அணைத்தது எனக்கு பல பாடங்களை கற்று கொடுத்தது என இஸ்ரோ தலைவர் கே சிவன் மனம் திறந்து பேசியுள்ளார்.

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் நோக்கில் நம் நாட்டின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ கடந்த ஜூலையில் சந்திரயான் 2வை விண்ணில் ஏவியது. திட்டமிட்டப்படி நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 2ன்  ஆர்ப்பிட்டர் கழற்றி விடப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று நிலவில் சந்திரயான் 2 தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

கே.சிவன்

சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் காட்சியை பார்ப்பதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் மோடி சென்றார். நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோவின் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் ஏமாற்றம் மற்றும் சோகத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார்.

மோடி, கே.சிவன்

பின் அங்கிருந்து மோடி கிளம்பி செல்வதற்கு முன் மிகவும் சோகத்தில் இருந்த இஸ்ரோ தலைவர் கே.சிவனை கட்டி பிடித்து ஆறுதல் சொன்னார். மோடியின் இந்த செயல் நாட்டு மக்களை மிகவும் கவர்ந்தது. தற்போது அந்த சம்பவம் குறித்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கே. சிவன் மனம் திறந்து  கூறியுள்ளார். அவர் கூறியதாவது: நான் மிகவும் உணச்சிவசப்பட்டு இருந்தபோது, மரியாதைக்குரிய பிரதமர் என்னை கட்டி பிடித்தார். என் மனதில் உண்மையில் என்ன நடந்தது என்பது அவருக்கு புரிந்தது. அவர் தலைமை பண்பை காட்டினார். அவரது அணைப்பு எனக்கு பல பாடங்களை கற்பித்தது. பிரதமரே என்னை ஆறுதல்படுத்தியது பெரிய விஷயம். அது எங்களுக்கு பெரிய நிம்மதியை அளித்தது என தெரிவித்தார்.