மோடியின் அறிவுரைப்படி செயல்படும் தேர்தல் ஆணையம்; சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!

 

மோடியின் அறிவுரைப்படி செயல்படும் தேர்தல் ஆணையம்; சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!

ஆந்திராவை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து அம்மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது

புதுதில்லி: பிரதமர் மோடியின் அறிவுரைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆந்திராவை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து அம்மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தொடக்கம் முதலே அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.

andhra pradesh evm

அம்மாநிலத்தில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததால், அந்த தொகுதிகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்​ எழுதியுள்ளார்.

pm modi

இந்நிலையில், ஆந்திர மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது 30 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்களுக்கேற்ப செயல்படுவதாகவும் சாடியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் மூலம் மத்திய அரசு தேர்தல் நடவடிக்கைகளில் குறுக்கிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.