மோடியிடம் பேசிய 24 மணி நேரத்தில் பலன் அடைந்த உத்தவ் தாக்கரே…. தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய மகாராஷ்ரா கவர்னர்..

 

மோடியிடம் பேசிய 24 மணி நேரத்தில் பலன் அடைந்த உத்தவ் தாக்கரே…. தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய மகாராஷ்ரா கவர்னர்..

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 9 மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலை விரைந்து நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு அம்மாநில கவர்னர் கடிதம் எழுதியுள்ளார். மோடியிடம் தன்னை மேலவை உறுப்பினராக தன்னை தேர்ந்தெடுக்க கவர்னர் தயக்கம் காட்டுவதாக உத்தவ் தாக்கரே பேசிய 24 மணி நேரத்துக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அப்போது அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லை. அரசியல் சட்டத்தின்படி 6 மாதத்துக்குள் (மே 28) அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாகவோ பதவியேற்றால் மட்டுமே தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். 

கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி

மாநிலத்தில் காலியாக உள்ள எம்.எல்.சி. இடங்களில் ஒன்றில் நின்று எம்.எல்.சி.யாகி விடலாம் என உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக எம்.எல்.சி. தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. இதனையடுத்து அண்மையில் எம்.எல்.சி. உறுப்பினர்கள் நியமனத்தில் கவர்னருக்கான 2 ஒதுக்கீட்டில் ஒன்றை உத்தவ் தாக்கரேவை நியமிக்க கவர்னருக்கு அம்மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி இந்த விவகாரத்தில் மவுனமாக இருந்தார். இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று  கவர்னருக்கான ஒதுக்கீட்டில் உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி.யாக நியமிக்கக்கோரி கவர்னரிடம் மாநில அமைச்சரவை புதிதாக மீண்டும் பரிந்துரை செய்தது. ஆனாலும் கவர்னர் உடனடியாக தனது முடிவை அறிவிக்கவில்லை. 

மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம

இதனையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை போனில் தொடர்பு கொண்டு, மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தில் அரசியல் ஸ்திரமின்மை உருவாக்குவது சரியில்லை. கவர்னர் தன்னை மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய தாமதம் செய்யும் விவகாரத்தில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 9 மேலவை உறுப்பினர்கள் பதவிக்கு விரைவாக தேர்தல் நடத்தும்படியும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நேற்று கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.