மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாறுவதற்கான கட்டணத்தை குறைத்த டிராய்! நவம்பர் 11 முதல் அமலுக்கு வருகிறது

 

மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாறுவதற்கான கட்டணத்தை குறைத்த டிராய்! நவம்பர் 11 முதல் அமலுக்கு வருகிறது

வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றுவதற்கான கட்டணத்தை ரூ.6.46ஆக டிராய் அதிரடியாக குறைத்துள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நம் நாட்டில் சுமார் தற்போது சுமார் 100 கோடிக்கும் அதிகமான மொபைல் எண் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் தரமற்ற சேவையால் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களின் சேவைகளுக்கு மாறி விடுகின்றனர்.

எம்.என்.பி.

புதிய நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் மாற விரும்பினால் புதிய எண்ணைதான் பெற முடியும் என்ற நிலை முதலில் இருந்தது. ஆனால் அதன் பிறகு மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றி கொள்ளும் எம்.என்.பி. வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக கட்டணமாக ரூ.19ஐ வாடிக்கையாளர்களிடம் சேவை வழங்கும் நிறுவனம் பெறும்.

டிராய்

இந்நிலையில் மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றுவதற்கான கட்டணத்தை ரூ.6.46ஆக டிராய் குறைத்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைத்தொடர்பு எம்.என்.பி. கட்டணம் மற்றும் டிப்பிங் கட்டணம் (2வது திருத்தம்) விதிமுறைகள் 2019ன் படி ஒவ்வொரு போர்ட் கோரிக்கைக்கும் கட்டணமாக ரூ.6.46 பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த புதிய விதிமுறைகள் 2019 நவம்பர் 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.