மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

 

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், மைக்ரோசாப்ட். கடந்த 1975-ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பால் ஆலனும், பில்கேட்ஸும் இனைந்து தொடங்கினார்கள்.  உலகம் முழுவதும் பிரபலமான இந்த நிறுவனம் கணினிக்குத் தேவையான மென் பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983-ஆம் ஆண்டு வரை இருந்த பால் ஆலன், புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். அதிலிருந்து மீண்டு வந்த ஆலன், வல்கன் கேபிடல் எனும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார்.

ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அலுவலக பணிகளில்  இருந்து ஓய்வு பெற்று அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பால் ஆலன், சிகிச்சை பலனின்றி தனது 65 வயதில் இன்று காலமானார். இதனை அவரது சகோதரி ஜோடி உறுதி செய்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்த ஆலன் மறைவுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. பால் ஆலன் இழப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய இழப்பு என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பால் ஆலனின் மறைவைக் கேட்டதும் இதயம் உடைந்துவிட்டது. பால் சிறந்த பார்ட்னராகவும், நண்பராகவும் விளங்கியவர் என தங்களது ஆரம்ப கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து பில்கேட்ஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.