மே 3ம் தேதி வரை கடைகள் திறக்கப்படாது… மத்திய அரசின் முடிவை அமல்படுத்த மறுத்த ஜார்க்கண்ட்

 

மே 3ம் தேதி வரை கடைகள் திறக்கப்படாது… மத்திய அரசின் முடிவை அமல்படுத்த மறுத்த ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் கடைகள் திறப்பதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை அமல்படுத்த முடியாது. மே 3ம் தேதி வரை கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு, கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தி வருகிறது. லாக்டவுனால் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் பொருளாதார நடவடிக்கைகளை மெல்ல மெல்ல செயல்படுத்தும் வகையில், கிராமம் மற்றம் நகர்புறங்களில் கடைகள் திறப்பது தொடர்பான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.

ஜார்க்கண்ட் மாநில ஊரடங்கு நிலவரம்

இந்நிலையில், கடைகள் திறப்பதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை அமல்படுத்த முடியாது என ஜார்க்கண்ட் அரசு மறுப்பு காட்டியுள்ளது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது: ஜார்க்கண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடைகள் திறப்பதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை மாநிலத்தில் அமல்படுத்த முடியாது.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள்

மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் மே 3ம் தேதி வரை கடைகள் திறக்கபடாது. இதற்கு முன் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜார்க்கண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது. நேற்று அம்மாநிலத்தில் உதவி துணை ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.