மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு செக் வைக்க மீண்டும் ஜோடி போடும் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ்

 

மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு செக் வைக்க மீண்டும் ஜோடி போடும் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ்

பா.ஜ.வின் அசுர வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தை மம்தா பானர்ஜி தகர்த்து எறிந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசு அங்கு செய்து வருகிறது. தற்போது மம்தாவுக்கே ஆப்பு வைக்கும் வகையில் பா.ஜ. அங்கு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ. 18 தொகுதிகளை கைப்பற்றியது. அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 34லிருந்து 22ஆக குறைந்தது. 

மம்தா பானர்ஜி

அந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி 43.4 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. அதற்கு அடுத்து பா.ஜ. 40.3 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியோ வெறும் 5.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பா.ஜ.வை லெப் அண்டு ரைட் விட்ட மம்தா பானர்ஜி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பெட்டி பாம்பாக அடங்கி விட்டார்.

சோனியா, ராகுல் காந்தி

மேலும், பா.ஜ.வின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடாவிட்டால், 2021ல் நடைபெற இருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் தனக்கு கசப்பாக அமைந்து விடும் என்பதை மம்தா பானர்ஜி உணர்ந்து விட்டார். மேலும், அந்த மாநிலத்தில் தனியாக நின்று ஒன்றும் சாதிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியினரும் நினைப்பதாக தெரிகிறது. இதனையடுத்து திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் 2 ஆண்டுகள் கழித்து வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை இணைந்து சந்திப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து இப்போதே அதிகாரப்பூர்வமற்ற பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டன.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் கல்யாண் பானர்ஜியும் சுமார் அரைமணி நேரம் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் இருவரும் இரண்டு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக பேசியதாக தகவல் வெளியானது.