மேற்கு வங்கத்தில் தேர்தல்நாளில், அடித்து மிதித்து புதருக்குள் தள்ளப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர்

 

மேற்கு வங்கத்தில் தேர்தல்நாளில், அடித்து மிதித்து புதருக்குள் தள்ளப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர்

மேற்கு வங்கத்தில் நேற்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கரிம்புர் தொகுதி வேட்பாளருமான ஜெய்பிரகாஷ் மஜூம்தாரை அடித்து மிதித்து புதருக்குள் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கரிம்புர் உள்பட 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கரிம்புர் தொகுதி வேட்பாளருமான ஜெய்பிரகாஷ் மஜூம்தார் நேற்று வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு வந்தார். இஸ்லாம்புர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிடுவதற்காக காலை சுமார் 10.30 மணிக்கு வந்தார்.

ஜெய்பிரகாஷ் மஜூம்தார்

மஜூம்தார் சாலையோரத்தில் காரை விட்டு இறங்கியதும் சிலர் வேகமாக அவரை நோக்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உடல்ரீதியாக அவரை சிலர் தாக்கினர். இதில் மஜூம்தார் கீழே விழுந்தார். அப்போது லுங்கி அணிந்த நபர் ஒருவர் மஜூம்தாரை பின்னால் இருந்து மிதித்து புதருக்குள் தள்ளினார். இந்த காட்சியை அங்கு இருந்த செய்தியாளர்கள் படம் பிடித்தனர். மஜூம்தாரின் பாதுகாவலர்கள் அவரை தாக்கியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பியோடி விட்டனர். இடைத்தேர்தல் நடைபெறும் நாளில் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதருக்குள் தள்ளப்பட்ட ஜெய்பிரகாஷ் மஜூம்தார்

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பா.ஜ.க. தலைவர் ஜெய்பிரகாஷ் மஜூம்தார் கூறுகையில், எனக்கு பட்ட காயம் 2 நாளில் சரியாகி விடும். ஆனால் மேற்கு வங்கத்தின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட சேதம் எப்படி சரியாகும்? என தெரிவித்தார். அதேசமயம், இந்த சம்பவத்துக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. பா.ஜ.க.வின் உட்கட்சி மோதலில் மஜூம்தார் தாக்கப்பட்டார் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.