மேகேதாட்டு அணை விவகாரம்: கனிமொழிக்கு மத்திய அமைச்சர் முக்கிய கடிதம்

 

மேகேதாட்டு அணை விவகாரம்: கனிமொழிக்கு மத்திய அமைச்சர் முக்கிய கடிதம்

மேகேதாட்டு விவகாரத்தில் திமுக எம்.பி., கனிமொழி மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்

டெல்லி: மேகேதாட்டு விவகாரத்தில் திமுக எம்.பி., கனிமொழி மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில், தமிழக எம்.பி.,-க்கள் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணைக்கு ஒப்புதல் வழங்கப்படாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். மேலும், மேகேதாட்டு அணை சர்ச்சையில் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டாம் எனவும் அக்கடிதத்தில் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.