மேகி நூடுல்ஸ் விற்பனை ஜோர்! நெஸ்லே இந்தியாவின் லாபம் படுஜோரு…

 

மேகி நூடுல்ஸ் விற்பனை ஜோர்! நெஸ்லே இந்தியாவின் லாபம் படுஜோரு…

பிரபல மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.595.41 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும்.

நுகர்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.595.41 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 33.46 சதவீதம் அதிகமாகும். 2018 செப்டம்பர் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.446.11 கோடி ஈட்டியிருந்தது.

நெஸ்லே இந்தியா நிறுவனம்

2019 செப்டம்பர் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர வருவாய் 9.49 சதவீதம் அதிகரித்து ரூ.3,199.31 கோடியாக உயர்ந்தது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.2,921.99 கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் நெஸ்லே நிறுவனம் மொத்தம் ரூ.2,572.32 கோடி செலவு செய்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10.18 சதவீதம் அதிகமாகும்.

மேகி

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ் நாரயணன் இது குறித்து கூறுகையில், மேகி, கிட்கேட், நெஸ்லே மன்ஜ், நெஸ்கபே ஆர்.டி.டி., நான்குரோ மற்றும் சிரிகுரோ விற்பனை சிறப்பாக இருந்தது. கடந்த காலாண்டில் பால் மற்றும் அதன் வழிப்பொருட்கள் விலை அதிகமாக இருந்தது. வரும் நாட்களிலும் அவற்றின் விலை அதிகமாகவே இருக்கும் என தெரிவித்தார்.