மேகதாது விவகாரம்; அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

மேகதாது விவகாரம்; அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து திமுக தலைமையில் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தோழமைக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

katchi

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி திருச்சியில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சி பேதங்களின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக, அமமுக வந்தால் வரவேற்போம். கடந்த 24 மணி நேரத்தில் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் அழைக்கப்பட்டது. மற்ற கட்சிகளை அழைக்க நேரமில்லாததால் அழைக்க முடியவில்லை என்றார்.