மேகதாதுவில் அணை கட்ட அனுமதியா? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

 

மேகதாதுவில் அணை கட்ட அனுமதியா? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகிறது. ஒருவேளை, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டிவிட்டால், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறக்கூடிய சூழல் ஏற்படும். 

supreme court

இதனால், கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. அத்துடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கர்நாடகாவுக்கு அறிவுரை வழங்கியது.

மத்திய அரசின் இந்த அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. 

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.