மெல்போர்ன் டெஸ்ட்: புஜாரா சதம்; வலுவான நிலையில் இந்திய அணி

 

மெல்போர்ன் டெஸ்ட்: புஜாரா சதம்; வலுவான நிலையில் இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது

-குமரன் குமணன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 89 ஓவர்களில 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் ஸ்கோர் 293 ஆக இருந்தபோது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. 9 பவுண்டரிகளோடு 204 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த கோலி, முதுகுவலி தந்த சிரமத்தால் முடிந்தவரை வேகமாக சதத்தை நெருங்கும் முனைப்பில் ஸ்டார்க வீசிய பந்தை தூக்கி அடிக்க, அதை ஃபிஞ்ச் பிடித்தார். 

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, அணியின் ஸ்கோர் 299 ஆக ஸ்கோர் இருந்தபோது, மிக தாழ்வாக சென்ற பந்தை கணிக்க தவறி கம்மின்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். 319 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் புஜாரா எடுத்த 106 ரன்கள், அவரது 17ஆம் சதம் ஆகும். இதன் மூலம் கங்குலியை பின்னுக்கு தள்ளினார் புஜாரா.

361 ஆக ஸ்கோர் இந்திய அணியின் ஸ்கோர் இருந்தபோது ரஹானே ஆட்டமிழந்தார். மிக பொறுமையாக விளையாடி இரண்டே பவுண்டரிகளோடு 76 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து லியோன் பந்துவீச்சில் LBW ஆனார் ரஹானே.

இதன் பிறகு வந்த ரோஹித் ஷர்மா, முதலில் நிதானமும் கடைசி கட்டத்தில் அதிரடியுமாக ஆடி 114 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். மறுபக்கம் பண்ட் 39 (76) ஸ்டார்க் பந்துவீச்சில் க்வாஜாவிடமும், ஜடேஜா 4 (3) ஹேசில்வுட் பந்துவீச்சில் பெய்னிடமும் கேட்ச் கொடுத்து வெளியேறினர். ஜடேஜா ஆட்டமிழந்தவுடன் கோலி இந்திய இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 443 ரன்கள்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் 6 ஒவர்களை எதிர்கொண்டு 8 ரன்கள் எடுத்துள்ளனர். ஹாரிஸ் 13 பந்துகளில் 5 ரன்களும், ஃபிஞ்ச் 23 பந்துகளில் 3 ரன்களும் எடுத்துள்ளனர். இவர்களில் ஒருவரையாவது இன்றே வீழ்த்தியிருந்தால், ஆஸ்திரேலிய அணி கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்.

தற்போதைய நிலையில் 435 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியை, முடிந்தவரை விரைவில் வீழ்த்தவே இந்திய அணி திட்டமிடும். அப்படி ஒரு வியூகம் எவ்வளவு தூரம் நிறைவேறும் என்பது நாளை காலை 5 மணி முதல் தெரிய தொடங்கும்.