மெட்ரோ ரயிலில் இலவச பயணம்.. கெஜ்ரிவாலுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்

 

மெட்ரோ ரயிலில் இலவச பயணம்.. கெஜ்ரிவாலுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை மறைமுகமாக உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது

தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, டெல்லி பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், 3 மாதங்களுக்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று கடந்த ஜூன் மாதம் தெரிவித்து இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரயில் பேஸ் 4 திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், 103.94 கி.மீட்டர் தொலைவு கொண்ட பேஸ் 4 திட்டத்தை நிறைவேற்ற தேவையான நில செலவினத்தை மத்திய அரசும், மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் ஏற்று கொள்ள வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதை எந்தவித தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், நிலத்துக்கான ரூ.2,447.19 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதி தீபக் குப்தா குறிப்பிடுகையில், மக்களை இலவசமாக பயணிக்க விட்டால் அது பிரச்சினையாக இருக்கும். இலசங்கள் இருந்தால் அங்கு சிக்கல் இருக்கும். எனவே டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் நிதிநிலையாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது மெட்ரோவுக்கு இழப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என டெல்லி அரசுக்கு வலியுறுத்தினார்.