மூன்றே ஆண்டுகளில் முதல் இடத்தை பிடித்த ரிலையன்ஸ் ஜியோ! வளர்ச்சியா? எச்சரிக்கையா?

 

மூன்றே ஆண்டுகளில் முதல் இடத்தை பிடித்த ரிலையன்ஸ் ஜியோ! வளர்ச்சியா? எச்சரிக்கையா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கிய 3 ஆண்டுகளுக்குள் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மெகா கோடீஸ்வருமான முகேஷ் அம்பானி 2016ம் ஆண்டில் தனது ரிலையன்ஸ் ஜியோ வாயிலாக இந்திய தொலைத்தொடர்பு சேவையில் களம் இறங்கினார். இலவச வாய்ஸ், டேட்டா என அதிரடி சலுகைகளை அறிவித்து குறுகிய காலத்தில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தார். 

ஏர்டெல்

அதேசமயம் ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் இந்த துறையை விட்டு ஓடிவிட்டன. பார்தி ஏர்டெல், வோடா போன், ஐடியா, பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் மட்டுமே தாக்கு பிடித்து எதிர்த்து நின்றன. ஜியோவின் போட்டியால் அந்த நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் இணைய முடிவு செய்தன. அந்த நிறுவனங்கள் இணைந்த பிறகு அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பெரிய நிறுவனமாக வோடாபோன் ஐடியா நிறுவனம் உருவானது.

வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் இணைந்தால் அந்த நிறுவனத்தின் மொத்த இணைப்புகளின் 40 கோடியை தாண்டியது. அதுவரை முதல் இடத்தில் இருந்த பார்தி ஏர்டெல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. வோடாபோன்  ஐடியா நிறுவனம் முதல் இடத்தை பிடித்த போதிலும் அந்நிறுவனத்தின் இணைப்புகள் எண்ணிக்கை மாதந்தோறும் குறைந்துதான் வந்தது. 

வோடாபோன் ஐடியா

இந்நிலையில் கடந்த மே மாதம் பார்தி ஏர்டெல்லை (32.03 கோடி இணைப்புகள்) பின்னுக்கு தள்ளி ஜியோ நிறுவனம் (32.29 கோடி இணைப்புகள்) இரண்டாவது இடத்தை பிடித்தது. தற்போது அதேவேகத்தில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் இறுதிநிலவரப்படி வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 32 கோடியாக குறைந்தது. அதேசமயம் ஜியோ இணைப்புகளின் எண்ணிக்கை 33.13 கோடியாக உயர்ந்துள்ளது. ஆக, தொடங்கிய 3 ஆண்டுகளுக்குள் ஜியோ நிறுவனம் நாட்டின் அதிக மொபைல் இணைப்புகளை கொண்ட மிகப்பெரிய இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியை ஒரு எச்சரிக்கையாகவும் பார்க்க வேண்டியது உள்ளதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர். போட்டிக்கு ஆள் இல்லாமல் போனால் தொலைத்தொடர்பு துறையில் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கம் தலை தூக்க வாய்ப்புள்ளது. பிறகு அந்த நிறுவனம் வைத்ததுதான் விலை என்று ஆகிவிடும் என அவர்கள் கூறுகின்றனர்.