மூன்று ஐசிசி விருதுகளை அள்ளிய விராட் கோலி – வரலாற்று சாதனை

 

மூன்று ஐசிசி விருதுகளை அள்ளிய விராட் கோலி – வரலாற்று சாதனை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கான விருதுகளில் மூன்றை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தட்டிச் சென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கான விருதுகளில் மூன்றை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தட்டிச் சென்றுள்ளார். 

டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் வீரர்களின் செயல்திறனை கணக்கிட்டு அதற்கேற்ப அணி உருவாக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்துக்கான ஐசிசியின் ஆண்களுக்கான கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் வீரர், 2018-ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஆண்களுக்கான கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரர் விருதும் விராட் கோலிக்கு வழங்கப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் விருதும் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் வீரர் இம்மூன்று விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டில் விராட் கோலி 13 டெஸ்ட் போட்டிகளில் 55.08 எனும் சராசரியுடன் 1322 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் அடங்கும். 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி ஆறு சதங்களுடன் 133.55 எனும் சராசரியுடன் 1202 ரன்கள் குவித்துள்ளார். 10 டி20 போட்டிகளில் 211 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகிலேயே அதிக ரன்கள் எடுத்தவரும் விராட் கோலிதான். விராட் கோலி ஏற்கனவே இரண்டு முறை ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட் அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கும், மூன்று நியூசிலாந்து வீரர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டிகள் அணியில் நான்கு இந்திய வீரர்கள் மற்றும் நான்கு இங்கிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளில் இருந்து ஓருவர் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளில் இருந்து ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஐசிசியின் டெஸ்ட் அணியின் இடம்பெற்ற வீரர்கள் யார்?

1. டாம் லாதம் (நியூசிலாந்து)

2. டிமுத் கருணரத்னே (இலங்கை)

3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)

4. விராட் கோலி (இந்தியா) – கேப்டன்

5. ஹென்றி நிக்கோலஸ் (நியூசிலாந்து)

6. ரிஷப் பந்த் (இந்தியா) – விக்கெட் கீப்பர்

7. ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்)

8. ககிஸோ ரபடா (தென் ஆப்ரிக்கா)

9. நாதன் லயன் (ஆஸி)

10. ஜஸ்பித் பும்ரா (இந்தியா)

11. மொஹம்மத் அப்பாஸ் (பாகிஸ்தான்)

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான அணி

1. ரோஹித் ஷர்மா (இந்தியா)

2. ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து)

3. விராட் கோலி (இந்தியா) – கேப்டன்

4. ஜோ ரூட் (இங்கிலாந்து)

5. ராஸ் டெய்லர் (நியூஸிலாந்து)

6. ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) – விக்கெட் கீப்பர்

7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

8. முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்)

9. ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

10. குல்தீப் யாதவ் (இந்தியா)

11. ஜஸ்பித் பும்ரா (இந்தியா)

இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா ஐசிசியின் சிறந்த நடுவர் விருதை வென்றுள்ளார்.

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது ரிஷப் பந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

டி20 போட்டியில் சிறந்த செயல்திறன் கொண்டவருக்கான விருதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரோன் பின்ச் வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் 76 பந்துகளில் 16 பௌண்டரி 10 சிக்ஸர் விளாசி 172 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் 32 வயதாகும் ஆஸ்திரேலிய வீரர் பின்ச்.

ஐசிசி அசோசியேட் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதை ஸ்காட்லாந்து வீரர் கலும் மெக்லோட் வென்றுள்ளார்.