மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு : அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

 

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு :  அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நல்லகண்ணுவுக்கு புது வீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையான ஒரு தலைவர் என்றால் அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தான். இலவசத்தைப் புறக்கணிக்க நினைக்கும் நல்லகண்ணு  சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். 

 

இதையடுத்து  தியாகராய நகரிலுள்ள உள்ள வீட்டிலிருந்து இடம்பெயர்ந்து கே.கே. நகர் சென்றார் நல்லகண்ணு. ஏன்  இந்த திடீர் மாற்றம் என்று விசாரித்ததில் நல்லகண்ணு வசித்து  வந்த வீடு தமிழக அரசு சார்பில் அவருக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டதாம். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாத நல்லகண்ணு அனைவரைப் போலவும் வாடகை கொடுத்தே அங்கு வசித்து வந்துள்ளார்.

 

இதைத் தொடர்ந்து குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் வருவதால் அங்கு வசிப்பவர்களை வேறு இடத்துக்கு இடம்மாறக்கோரி மாநகராட்சி தரப்பிலிருந்து நோட்டீஸ் தரப்பட்டது. இதனால் அரசின் உத்தரவை ஏற்று 12 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை காலி செய்து கே.கே. நகருக்கு இடம் பெயர்ந்தார் நல்லகண்ணு. தலைவர்களை அவமதிக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நல்லகண்ணுவுக்கு புது வீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

 

இதை தொடர்ந்து கம்யூனிஸ் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு  தமிழக அரசு,  வீடு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பாக அவருக்கு வடிவு ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்லகண்ணு  அரசு ஒதுக்கியுள்ள வீட்டிற்கு குடியேறுவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.