முழு நேர கேப்டனாக தயார்: அரங்கை அதிர செய்த ரோஹித் ஷர்மா

 

முழு நேர கேப்டனாக தயார்: அரங்கை அதிர செய்த ரோஹித் ஷர்மா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கேப்டன் பொறுப்பேற்று, அத்தொடரை வென்று காட்டியுள்ள ரோஹித் ஷர்மா, வாய்ப்பு வந்தால் முழு நேர கேப்டன் பொறுப்பை ஏற்க தயார் என அதிரடி தெரிவித்துள்ளார்

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கேப்டன் பொறுப்பேற்று, அத்தொடரை வென்று காட்டியுள்ள ரோஹித் ஷர்மா, வாய்ப்பு வந்தால் முழு நேர கேப்டன் பொறுப்பை ஏற்க தயார் என அதிரடி தெரிவித்துள்ளார்.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்றது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்று முடிவில் இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேச அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இதையடுத்து இந்திய-வங்கதேச அணிகள் மோதிய இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. அதில், வங்கதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருக்க, அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மா திரு வெற்றிக்கு வித்திட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது வரை மூன்று தொடர்களில் கேப்டனாக வென்று காட்டியிருந்த ரோஹித் ஷர்மா, ஆசிய கோப்பை தொடரையும் வென்று நான்காவது முறையாக சாதித்து காட்டியுள்ளார்.

போட்டித் தொடரின் முடிவில் செய்தியாளர்களை ரோஹித் ஷர்மா சந்தித்தார். அப்போது, எதிர்காலத்தில் கேப்டன் பொறுப்பை முழு நேரமாக ஏற்க தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நிச்சயமாக, வாய்ப்பு வந்தால் முழு நேர கேப்டன் பொறுப்பை ஏற்க தயார் என அதிரடியாக தெரிவித்து அரங்கை அதிரச் செய்தார்.