முன்பதிவு ரசீதை ஒப்படைக்காததால் பிரச்னை… திருமண மண்டபம் யாருக்கு என்று நடந்த அக்கப்போர்

 

முன்பதிவு ரசீதை ஒப்படைக்காததால் பிரச்னை… திருமண மண்டபம் யாருக்கு என்று நடந்த அக்கப்போர்

திருமண மண்டபத்தை புக் செய்துவிட்டு, ரசீதை காட்டி பதிவு செய்யாமல் கவனக்குறைவால் சென்றதால் திருமண மண்டபம் யாருக்கு என்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் தனது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் மண்டபத்தை கடந்த ஜூலை மாதமே முன்பதிவு செய்தார்.

திருமண மண்டபத்தை புக் செய்துவிட்டு, ரசீதை காட்டி பதிவு செய்யாமல் கவனக்குறைவால் சென்றதால் திருமண மண்டபம் யாருக்கு என்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் தனது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் மண்டபத்தை கடந்த ஜூலை மாதமே முன்பதிவு செய்தார். ரூ.80 ஆயிரம் பணத்தைக் கட்டி ரசீதைப் பெற்ற அவரிடம், இதை மண்டபத்தில் காட்டி பதிவு செய்துகொள்ளும்படி நகராட்சி ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர் பணம் கட்டிவிட்டோமோ என்று அலட்சியமாக சென்றுவிட்டார்.

wedd2

பணம் கட்டியதற்கான ரசீதைக் காட்டினால் மட்டுமே, மண்டபத்தில் அந்த தேதி காலியில்லை என்று குறிப்பிடப்படும். ஜெயப்பிரகாஷ் ரசீதை காட்டாததால், மண்டபத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட நாள் காலியாக உள்ளது என்றே காட்டிவந்துள்ளது. இந்த நிலையில், திருவஞ்சேரியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வந்து தன்னுடைய மகன் திருமண வரவேற்பு, திருமணம் என்று இரண்டு நாட்களுக்கு மண்டபம் வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் கேட்டுள்ளார். குறிப்பிட்ட தேதி காலியாக உள்ளது என்பதால், பணத்தைக் கட்டிவிட்டு ரசீதை மண்டபத்தில் காட்டும்படி கூறியுள்ளார்கள். அவரும் பணத்தைக் கட்டி ரசீது காட்டி முன்பதிவு செய்துள்ளார். அதன்பிறகு திருமண அழைப்பு உள்ளிட்ட ஆவணங்களையும் காட்டி உறுதி செய்துவிட்டார்.

wedd3

திருமண நாள் வந்தது. இரு தரப்பினரும் மண்டபத்துக்கு வந்து திருமணத்துக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். எல்லாம் இரண்டு இரண்டு பேராக வரவே மண்டப ஊழியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அப்போது, ராமச்சந்திரன் தரப்பு மட்டுமே புக் செய்துள்ளது என்றும், ஜெயப்பிரகாஷ் தரப்பில் புக் செய்யவில்லை என்றும் மண்டப ஊழியர்கள் கூறியுள்ளனர். அப்போது, ஜெயப்பிரகாஷ் தான் கட்டிய ரசீதை காட்டியுள்ளார். ராமச்சந்திரன் தரப்பினரும் பணம் கட்டியதற்கான ரசீதைக் காட்டியுள்ளனர்.
இதனால், நகராட்சி அலுவலகம்தான் ஏதோ தவறு செய்துவிட்டது என்று கருதி, இரண்டு தரப்பினரும் நகராட்சி அலுவலகம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயப்பிரகாஷ் செய்த தவறு பற்றி அவருக்கு விவரிக்கப்பட்டது. ஆனால், இது பற்றி எல்லாம் என்னிடம் யாரும் கூறவில்லை. ஜூலை மாதமே முன்பதிவு செய்துவிட்டேன். அதனால், மண்டபம் எனக்குத்தான் தர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார்.

2family

தகவல் அறிந்து தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ராமச்சந்திரன் அனைத்து ஆவணங்களையும் முறைப்படி மண்டபத்தில் காட்டி முன்பதிவு செய்துள்ளார். ஆனால், ஜெயப்பிரகாஷ் பணம் கட்டியதுடன் மண்டபத்துக்கு சென்று முன்பதிவு செய்யத் தவறிவிட்டார். அதனால், ராமச்சந்திரனுக்குத்தான் மண்டபத்தை ஒதுக்க முடியும் என்று தாம்பரம் நகராட்சி அலுவலர்கள் உறுதியாக கூறிவிட்டனர்.
அதே நேரத்தில், ஜெயச்சந்திரன் பணம் கட்டிவிட்டார், அழைப்பிதழை எல்லோருக்கும் அளித்துவிட்டார். அதனால், திருமண மண்டபத்துக்கு வெளியே காலியாக உள்ள இடத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர் கட்டிய ரூ.80 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிடுகிறோம் என்று சமரசம் பேசப்பட்டது. 
தன்னுடைய தவறு காரணமாக மண்டபம் கிடைக்காமல் போனதால், வேறு வழியின்றி இந்த சமரசத்துக்கு ஜெயப்பிரகாஷ் உடன்பட்டார். 
ஒரே நாளில் இரு தரப்பினர் திருமண மண்டபம் தங்களுக்குத்தான் என்று சண்டை போட்டதால் தாம்பரம் நகராட்சி அலுவலகமே போர்க்களம் போல காட்சியளித்தது.