முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் – குழப்பம் தரும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம்

 

முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் – குழப்பம் தரும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம்

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே அனல் பறந்து வரும் தேர்தல் களத்தில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூர சம்பவத்தில், முகநூல் மூலம் இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டதாக சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் பெரும் புள்ளிகள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீடும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், இது தொடர்பாக நாடு முழுவதும் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் , பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் 

இந்த சம்பவத்தில் மிக முக்கியத் தொடர்புடையவராகக் கருதப்படுபவர் அதிமுக பிரமுகர் பொள்ளாச்சி ஜெயராமன். இவர் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி கருத்துத் தெரிவித்த பொள்ளாச்சி ஜெயராமன்,  “பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான் தான். பாதிக்கப்பட்ட பெண் தரப்பு அணுகியதை தொடர்ந்து காவல்துறையில் புகாரளிக்க நான் தான் கூறினேன். குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உரிய அழுத்தம் கொடுத்தேன். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது.என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்

இந்த சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய அதிமுக பிரமுகர், ‘பார்’ நாகராஜ், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாகப் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், ” இந்த சம்பவத்தில் எந்த அரசியல் பிரமுகர்களுக்கும் சம்பந்தமில்லை. அரசியல் கட்சியினர் யாருக்கும் இதில் தொடர்பில்லை. தவறாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர்கள் செயல்களும் சர்ச்சிக்குள்ளாகி வருகின்றன. ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டி எவ்வளவு பணம் பறிக்கப்பட்டது என்று அவருக்குத் தெரியவில்லை.  `சமூக ஆர்வலர்’ என்ற வார்த்தைக்குக் கூட அவருக்கு அர்த்தம் தெரியவில்லை. 

பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும் பதட்டமாகவே காணப்பட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் பின்னணி அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.  2017- ஆம் ஆண்டு  திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் செய்த ஒரு பெண்ணை  பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்து பிரபாலானவர் தான் இந்த பாண்டியராஜன்  ஐ.பி,எஸ்.. திருப்பூர் ஏடிஎஸ்பியாக இருந்த போது ஒரு பெண்ணை அறைந்தவருக்கு பதவி உயர்வில் எஸ்.பி பதவியும் கிடைத்து பொள்ளாச்சியின் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை விசாரிக்கும் வழக்கும் அவர் கைகளுக்கு வந்திருக்கிறது.

பொள்ளாச்சி டிஜிபி

தொடரும் குழப்பங்கள் 

இப்பொழுது, “நான் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு அழுத்தம் கொடுத்தேன்” என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறி வரும் அதே நேரத்தில்,  காவல் கண்காணிப்பாளர் “அரசியல் கட்சி பிரமுகர்கள் யாருக்கும் தொடர்பில்லை” என்கிறார். இவ்வாறு இந்த சம்பவத்தில் ஒவ்வொருவரும்  முரணாகப் பேசி வருவதும் அவர்கள் பின்னணியும்  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.