முன்னாள் பிரதமர் நேரு ஒரு கிரிமினல்! பா.ஜ. மூத்த தலைவர் ஆவேசம்

 

முன்னாள் பிரதமர் நேரு ஒரு கிரிமினல்! பா.ஜ. மூத்த தலைவர் ஆவேசம்

முன்னாள் பிரதமர் நேரு ஒரு கிரிமினல் என பா.ஜ. மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் கொடுத்து வந்தன. சுமார் 70 ஆண்டுகளாக இந்த சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி பிடித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடியாக அந்த சட்டப்பிரிவுகளை நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதாவையும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியது.

சிவராஜ் சிங் சவுகான்

காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இருப்பினும் அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்தனர். மேலும், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு  நாடு முழுவதும் பலத்த வரவேற்பு நிலவுகிறது.

பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர்

இந்நிலையில், நாட்டின் முதல் பிரதமரான நேருவை கிரிமினல் என பா.ஜ. மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் பகிரங்கமாக பேசியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் இது தொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் நேரு ஒரு குற்றவாளி. அவரின் முதல் குற்றம் ஜம்மு அண்டு காஷ்மீருக்குள் நுழைந்த பாகிஸ்தானை இந்திய ராணுவம் விரட்டி கொண்டு இருந்த போது போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதனால் மூன்றில் ஒரு பகுதி ( பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர்) பாகிஸ்தான் வசம் சென்றது. அடுத்து சட்டப்பிரிவு 370ஐ அமல்படுத்தி குற்றத்தை  செய்துவிட்டார். 

ஒரு நாட்டில் எப்படி 2 சின்னங்கள், 2 அரசியலமைப்புசட்டம் மற்றும் 2 தலைமை  இருக்க முடியும்? இது அநீதி அல்ல. தேசத்திற்கு எதிரான குற்றமாகும் என கூறினார்.