முன்னாள் கவுன்சிலர் மகன் ரகளை! பரிதாபத்தில் போக்குவரத்து காவலர்கள்!

 

முன்னாள் கவுன்சிலர் மகன் ரகளை! பரிதாபத்தில் போக்குவரத்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, குடிபோதையில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து, குடிபோதை ஆசாமியை விடுவித்ததோடு வாகனத்தையும் முன்னாள் கவுன்சிலரின் மகன் பறித்து சென்ற நிலையில், அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, குடிபோதையில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து, குடிபோதை ஆசாமியை விடுவித்ததோடு வாகனத்தையும் முன்னாள் கவுன்சிலரின் மகன் பறித்து சென்ற நிலையில், அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

helmet

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விடாபிடியாக நீதிமன்றம் கேட்டு வந்தும், பெரிதாக அலட்டிக் கொள்ளாத போக்குவரத்து காவல்துறை, தற்போது அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டதும், நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் மூலை முடுக்குகளில் எல்லாம் நின்று கடமையை செவ்வனே செய்து வருகிறார்கள். இப்படி சோதனைகளை மேற்கொண்டு அபராதத் தொகை வசூலிக்கும் போது, போலீசாருக்கும், விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல் நீடித்து வருகிறது..!
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் செந்துறை சாலையில் காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது அந்த பகுதியில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்ற தண்டபாணி என்ற நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தார். அப்போது, அவர் குடிபோதையில் இருந்ததால் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர் ராஜேந்திரன் என்பவரது மகன் செல்வகுமரன், தனது கூட்டாளிகளான வடிவேல், முருகன் ஆகியோருடன் சேர்ந்து உதவி ஆய்வாளர் மாதவராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து உதவி ஆய்வாளர் மாதவராஜ் பிடியில் இருந்த தண்டபாணியை விடுவித்ததோடு, தண்டபாணி ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

drunken driving

இதையடுத்து முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரனின் மகன் செல்வகுமரன் உள்பட 7 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் காவல்துறையினர். அனைவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் செல்வகுமரனை மட்டும் அவரது தந்தை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலையில் ஒப்படைப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ், நள்ளிரவில் முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று அவரது மகன் செல்வகுமரனை பிடித்து வந்துள்ளார். இதனைத் தடுக்க முயன்ற போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சாதாரண 2 ஆயிரத்து 300 ரூபாய் அபராதத்துக்கு பயந்து போலீசிடம் வம்பு செய்து ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு வாங்கி இருக்கின்றனர் முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரனின் மகனும், அவனது கூட்டாளிகளும். 
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ் தன்னை துப்பாக்கியால் தாக்கி விட்டதாக கூறி எம்.ஆர்.ராஜேந்திரன் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு புகார் தெரிவித்தார். இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் செந்துறையில் கடைகள் அடைக்கப்பட்டு முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் ஆய்வாளர் , காவல் உதவி ஆய்வாளர் புதியவர் என்றும் அரசியல் பிரமுகர் எம்.ஆர். ராஜேந்திரனின் செல்வாக்கு தெரியாமல் நடந்து கொண்டதாகவும், கடுமையான சட்டப் பிரிவுகளை நீக்கிவிட்டு 7 பேரையும் காவல் நிலைய ஜாமீனில் அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்தார்

police

இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜ் விசாரணைக்காக மாவட்டம் காவல் கண்காணிப்பாளரின் முன்பாக ஆஜரானார். வாகன சோதனையின் போது முன்னாள் கவுன்சிலர் மகன் செல்வகுமரன் ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டு வாகனத்தை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி அடங்கிய சிடி ஆதாரத்தை ஒப்படைத்தார். இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பலத்த நெருக்கடி கொடுக்கப்படுவது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.