முன்கூட்டியே 3 மாத ஓய்வூதியம்…… மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு

 

முன்கூட்டியே 3 மாத ஓய்வூதியம்…… மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு

கொரோனா வைரஸால் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில், சுமார் 3 கோடி மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியத்தை மத்திய அரசு முன்கூட்டியே வழங்க உள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கின்றனர்.

மாற்று திறனாளிகள்

இந்நிலையில் சுமார் 3 கோடி மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியத்தை மத்திய அரசு முன்கூட்டியே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஓய்வூதியம் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய சமூக உதவி திட்டத்தின்கீழ் (என்.எஸ்.ஏ.பி.) வசதியில்லாத மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குகிறது. 

விதவைகள்

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது. சுமார் 2.98 கோடி பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்குகளில் நேரடியாக ஓய்வூதியத்தை மத்திய அரசு செலுத்துகிறது. இந்த திட்டத்தன்கீழ், 60 முதல் 79 வயதான மூத்த குடிமக்களுக்கு ரூ.200 (மாதந்தோறும்), 80 மற்றும் அதற்கு மேல் வயதான மூத்த குடிமக்களுக்கு ரூ.500ம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 40 முதல் 79 வயது வரையிலான விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ.300ம், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான விதவைகளுக்கு ரூ.500ம் வழங்கப்படுகிறது. 79 வயது வரையிலான மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.300ம், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான மாற்று திறனாளிகளுக்கு ரூ.500ம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.