முத்தலாக் மசோதா: நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

 

முத்தலாக் மசோதா: நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

இஸ்லாமிய மதத்தில் உள்ள முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் முறைக்கு எதிரான சட்ட மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.

டெல்லி: இஸ்லாமிய மதத்தில் உள்ள முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் முறைக்கு எதிரான சட்ட மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.

இஸ்லாமிய மதத்தில் தலாக் என மூன்று முறை கூறி, தனது மனைவியை ஒருவர் விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனால், பாதிப்படைந்த பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், முத்தலாக் விவகாரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி, முத்தலாக்கில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் ஆறு மாதத்துக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, முத்தலாக் முறையை குற்றமாக கருதும் சட்ட மசோதா கடந்த கூட்டத் தொடரின் போது, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, முத்தாலக் முறை சட்டவிரோதமானது. அவ்வாறு மனைவியை விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமின் வழங்குவது உள்பட சில திருத்தங்களை மத்திய அரசு செய்தும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

இதனிடையே, முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதற்கு நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒப்புதல் வாங்க வேண்டும்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். கடந்த வாரம் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறவிருந்தது. இதன் மீதான விவாதத்தை இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கும்படி மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே வலியுறுத்தினார். இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்த மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இன்றைய அவை நடவடிக்கையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக எம்பிக்களுக்கு அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.