முதியோர் காப்பக மூதாட்டிக்கு கொரோனா! போரூர் அருகே அச்சம்

 

முதியோர் காப்பக மூதாட்டிக்கு கொரோனா! போரூர் அருகே அச்சம்

போரூர் அருகே உள்ள காரப்பாக்கத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் அருகே உள்ள காரப்பாக்கம் செட்டியார் அகரம் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் தங்கியிருந்த 85 வயது மூதாட்டி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படவே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு கொரோனா தொற்றை உறுதி செய்தது. இதனால் உடனடியாக அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

rajiv-gandhi-hospital.jpg

மேலும், முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் வரும் வரை அவர்கள் அனைவரையும் அங்கேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பகம் இருந்த பகுதி மூடப்பட்டுள்ளது.

coronavirus-image

மூதாட்டிக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் அவரை யாரும் வந்து சந்திக்கவில்லை, அவரும் வெளியே செல்லவில்லை என்பது முதல்கட்டமாக தெரியவந்தது. பிறகு எப்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று தொடர்ந்து ஆய்வு செய்ததில், அவருடன் தங்கியிருக்கும் மற்றொரு மூதாட்டியை சமீபத்தில் அவரது உறவினர்கள் வந்து சந்தித்துச் சென்றுள்ளனர். வேறு எந்த வகையிலும் வெளி நபர்களுடன் மூதாட்டிக்கு வெளியுலக தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் வந்தவர்கள் யார், எங்கிருந்து வந்தனர் என்று கண்டறியும் பணியில் சுகாதார மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.