முதல் டெஸ்டில் வீழ்ந்தது வெஸ்ட்இண்டீஸ்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

 

முதல் டெஸ்டில் வீழ்ந்தது வெஸ்ட்இண்டீஸ்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது

ராஜ்கோட்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முந்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 149.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 94 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, 555 ரன்கள் பின் தங்கி இருந்தது.

இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியாக, 48 ஓவர்கள் தாக்கு பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை தொடருமாறு இந்தியா ‘பாலோ ஆன்’ கொடுத்தது. இதன்படி, 2-வது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது,