முதல்வர் -பிரதமர் சந்திப்பில் அரசியல் உள்நோக்கமில்லை: ஹெச்.ராஜா விளக்கம்

 

முதல்வர் -பிரதமர் சந்திப்பில் அரசியல் உள்நோக்கமில்லை: ஹெச்.ராஜா விளக்கம்

பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்ததில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கும்பகோணம்: பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்ததில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி இன்று டெல்லியில் சந்தித்தார். டிடிவி தினகரன் – ஓபிஎஸ் சந்தித்த விவகாரம் வெளியே தெரிந்த பிறகு பிரதமர் – முதல்வர் சந்திப்பு நடந்திருப்பதால் இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் எனவும், இந்த சந்திப்பிறகு பிறகு தமிழக அரசியல் காட்சிகள் மாறலாம் எனவும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் அதனை அதிமுகவினர் உள்ளிட்ட சிலர் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக காவிரி ரதயாத்திரை இன்று கும்பகோணத்தில் இருந்து தொடங்கப்பட்டது. இதனை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ரதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் குறித்தே தவிர இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? என்று கட்சி தலைமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பே முடிவு செய்யும். அதன் பின் எங்களது பணி தொடங்கும் என்றார்.

உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிகவும் தரக்குறைவாக பேசியதற்காக ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இன்றுவரை கைது செய்யப்படாமல் சுதந்திரமாக உலாவி வருகிறார். அதேசமயம் கருணாஸ் வீடு புகுந்து கைது செய்யப்பட்டார். கருணாஸூக்கு ஒரு நியாயம், ராஜாவிற்கு ஒரு நியாயத்தை தமிழக அரசு வைத்திருக்கிறது என பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.