முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே

 

முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே

புனேயில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடியை சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை சமகாலம் (2.5 ஆண்டுகள்) விட்டு கொடுக்க மறுத்ததால் பா.ஜ.க. உடனான கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டது. மேலும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தது சிவ சேனா. மேலும் சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. இந்த முறை எதிர்கட்சியாக மாறியது.

சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி முறிவு

இந்நிலையில், புனேவில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் தொடர்பாக காவல்துறை இயக்குனர் ஜெனரல்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் தேசிய கருத்தரங்கு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புனே வந்தடைந்தார். புனே விமான நிலையத்தில் அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

உத்தவ் தாக்கரே

பா.ஜ.க. உடனான கூட்டணி முறிந்த பிறகு மற்றும் முதல்வராக பதவியேற்ற பிறகு உத்தவ் தாக்கரே முதல் முறையாக நேற்றுதான் பிரதமர் மோடியை சந்தித்தார். இதனால் சந்திப்பு பெரும் முக்கியத்துவத்தை பெற்றது. ஆனால், பிரதமர் மோடியை வரவேற்ற பிறகு உத்தவ் தாக்கரே உடனடியாக மும்பை  திரும்பி விட்டார் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.