முதலீட்டாளர்களை பதம் பார்த்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி

 

முதலீட்டாளர்களை பதம் பார்த்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் கலவரமாக இருந்தது. சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

சர்வதேச தரநிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்தியா தொடர்பான தனது மதிப்பீட்டை குறைத்தது. கெயில், பாரத் போர்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக அமையவில்லை. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் தெளிவின்மை நிலவுவதால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

மூடிஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், இண்டஸ்இந்த் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. சன் பார்மா, வேதாந்தா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும இன்போசிஸ் உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

யெஸ் பேங்க்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,043 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,478 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.68 லட்சம்  கோடியாக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 330.13 புள்ளிகள் சரிந்து 40,323.61 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 103.90 புள்ளிகள் வீழ்ந்து 11,908.15 புள்ளிகளில் நிலை கொண்டது.