முதலீட்டாளர்களை கதற வைத்த மத்திய பட்ஜெட்! சென்செக்ஸ் 395 புள்ளிகள் வீழ்ந்தது! ரூ.2 லட்சம் கோடி அவுட்

 

முதலீட்டாளர்களை கதற வைத்த மத்திய பட்ஜெட்! சென்செக்ஸ் 395 புள்ளிகள் வீழ்ந்தது! ரூ.2 லட்சம் கோடி அவுட்

தொடர்ந்து 4 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் இன்று அதளபாதாளத்தில் வீழ்ந்தது. சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்தது.

இன்று நாடாளுமன்றத்தில் 2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சாமானிய மக்களை மட்டும் பாதிக்காது தொழில் நிறுவனங்களையும் பாதிக்கும். மேலும், பட்ஜெட்டில் எதிர்பார்த்த பல சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. 

பங்கு வர்த்தகம்

மின்சார வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கிய நிலையில், வாகன துறை வளர்ச்சி தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தங்கம் மீதான இறக்குமதி உயர்த்தப்பட்டது இது போன்றவை பாதகமாக அமைந்ததால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. 

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் யெஸ் பேங்க், என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, வேதாந்தா, சன்பார்மா, டி.சி.எஸ்., ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் இண்டஸ்இந்த்வங்கி, கோடக் வங்கி, ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 778 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,692 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 138 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.151.30 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்ற நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.58 லட்சம் இருந்தது. இதனால் முதலீட்டாளர்களின் பணம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் கரைந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றை வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 394.67  புள்ளிகள் வீழ்ந்து 39,513.39 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 135.60 புள்ளிகள் குறைந்து 11,811.15 புள்ளிகளில் நிலை கொண்டது.