முதலீட்டாளர்களை கதற வைக்கும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 286 புள்ளிகள் குறைந்தது…

 

முதலீட்டாளர்களை கதற வைக்கும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 286 புள்ளிகள் குறைந்தது…

பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை இந்திய ரிசர்வ் வங்கி குறைத்ததால், இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 286 புள்ளிகள் வீழ்ந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நிலவரம், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர், பொருளாதார மந்த நிலை, வாகனங்கள் விற்பனை மந்தம், சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாகவே குறைத்தது. இருப்பினும், அது பங்குச் சந்தைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

வீழ்ச்சி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர், யெஸ் பேங்க், ஹீரோமோட்டோ கார்ப், டெக்மகிந்திரா உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, வேதாந்தா மற்றும் ஐ.டி.சி. உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,109 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,372 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 160 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.138.77 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.54 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 286.35 புள்ளிகள் குறைந்து 36,690.50 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 92.75 புள்ளிகள் இறங்கி 10,855.50 புள்ளிகளில் முடிவுற்றது.