முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி லாபத்தை கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்தது..

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி லாபத்தை கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரத்தின முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட கடந்த சனிக்கிழமையன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுமோசமாக இருந்தது. இதனால் இன்று வர்த்தகம் எப்படி இருக்குமோ என்ற கலக்கத்தில் முதலீட்டாளர்கள் இருந்தனர். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தது மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் மேனுபாக்சரிங் நடவடிக்கை சுமார் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருந்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் இன்று நன்றாகவே இருந்தது.

கச்சா எண்ணெய்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.டி.சி., டி.சி.எஸ்., எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 966 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,495 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 184 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.75 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று ஒருநாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

ஐ.டி.சி.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்  சென்செக்ஸ் 136.78 புள்ளிகள் உயர்ந்து 39,872.31 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 46.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,707.90 புள்ளிகளில் நிலை கொண்டது.