முதலீட்டாளர்களுக்கு ரூ.67 ஆயிரம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி……

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.67 ஆயிரம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி……

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கொரோனாவைரஸால் சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் வங்கிகளும் பாதிக்கப்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் குறிப்பிட்ட சில துறைகளை தவிர்த்து மற்ற துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இல்லாததால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

ஸ்டேட் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், பவர்கிரிட், டெக்மகிந்திரா, எல் அண்டு டி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், மாருதி, ஹீரோமோட்டோகார்ப் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 886 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,612 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.71 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ரூ.67 ஆயிரம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 161.31 புள்ளிகள் சரிந்து 40,894.38 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 53.30 புள்ளிகள் வீழ்ந்து 11,992.50 புள்ளிகளில் முடிவுற்றது.